சென்னை: முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என ஜெயலலிதா கருதுவதாக அவர் கூறியுள்ளார். "64 நிறுவனங்கள் மூலம் தமிழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய். சட்டப்பேரவையில் கேள்வி கேட்க ஆள் இல்லாத நேரத்தில் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிடு கிறார்," என்று ராமதாஸ் சாடியுள்ளார்.
தமிழகத்துக்கான முதலீடுகள் குறித்து ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என சவால் விடுத்துள்ள அவர், தொழில் முதலீடுகள் வழி தமிழகத்தில் எத்தனை பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது எனக் கேள்வி எழுப்பி உள்ளார். "முதலீட்டாளர்கள் மாநாட்டின் முடிவில் தமிழகத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய முன்வந்த நிறுவனங் களின் பட்டியலை அரசு வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டிருந்தேன். அதை தமிழக அரசு இதுவரை மறுக்கவில்லை," என ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

