ராமநாதபுரம்: தமிழகத்தில் மிக விரைவில் குலேபகாவலி ஆட்சி ஏற்படும் என அதிமுக எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத சாதனை என்றார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'குலேபகாவலி' என்ற திரைப்படத்தில் பெண்களே நாட்டை ஆட்சி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. அதை உதாரணமாகக் குறிப்பிட்டே அன்வர் ராஜா மேற்கண்டவாறு கூறினார். "பெண்கள் வெற்றி பெற்று பதவிக்கு வருவதால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 'குலேபகாவலி' ஆட்சி வந்து விடும். அதிகாரத்தில் பெண்கள் வந்துவிட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. நிர்வாகம் நன்றாக நடக்கும்.
மேலும், 50 விழுக்காடு பொது ஒதுக்கீட்டிலும் பெண்கள் போட்டியிட்டு வென்றால், அவர்களின் மொத்த பங்களிப்பு 70 விழுக்காடாக அதிகரிக்கக்கூடும்," என்றார் அன்வர் ராஜா.

