முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களான வி.சி.சந்திர குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோருக்கு மாநில அளவில் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 'மக்கள் தேமுதிக'வினர் ஈரோட்டில் மாநாடு ஒன்றை நடத்தினர். அப்போது அவர்கள் கட்சியைக் கலைத்துவிட்டுத் திமுகவில் இணைவதாக அறிவித்தனர். அவர்களுக்குத் திமுகவில் மாநில அளவில் முக்கிய பதவிகளை திரு கருணாநிதி வழங்கியுள்ளார். இதுகுறித்துத் திமுக பொது செயலாளர் க.அன்பழகன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், திமுக சட்டதிட்ட விதிப்படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராகவும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளராகவும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எச்.சேகர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சி சிவா ஆகியோர் தீர்மானக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பேராசிரியர் கான்ஸ் டன்டைன் ரவீந்திரன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராகவும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.அப்துல்காதர் விவசாய அணி இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

