சென்னை: தமிழக அரசு தவறான தகவலைச் சொல்லி மக்களைத் திசை திருப்பக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். மக்கள் டெங்கிக் காய்ச்சல் தொடர்பில் பீதியில் இருப்பதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். எனவே எதார்த்த நிலையை உணர்ந்து அரசு விழித்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி உள்ள அவர், தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சல் உண்மையிலேயே அறவே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார்.
° "சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் சேகர்பாபு பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,515 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த ஆண்டு, இதுவரை 982 பேர் பாதிக்கப் பட்டு 3 பேர் இறந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். "அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தமிழகத்தில் டெங்கி முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்," எனக் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் திருவள்ளூ ரில் இருவர் டெங்கிக் காய்ச்சலால் இறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல்வேறு பகுதிகளில் மேலும் பலர் இக்காய்ச்சலால் அவதிப்படுவதாகத் தெரிவித்தார். "அதிமுக அமைச்சர் டெங்கி அறவே இல்லை என்று மறுத்தபோதிலும் அரசு தகவல்படியே 31ஆம் தேதிய விவரப்படி 1,315 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என கருணாநிதி கூறியுள்ளார்.

