சென்னை: சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த பாட்டிக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தமது 15 வயது பேத்தியை மது என்பவருக்குத் திருமணம் செய்து வைத்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் பார்வதி மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், "குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் 11வது பிரிவின்படி குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கில் பெண்களுக்குத் தண்டனை விதிக்க முடியாது," என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பார்வதிக்கு நிபந்தனை அடிப்படையில் முன்பிணை வழங்கி உத்தரவிட்டார்.

