புதுடெல்லி: டெல்லியில் சராசரியாகத் தினமும் 21 பேர் கடத்தப்பட்டுள்ளதாகத் தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகத்தின் 2015ஆம் ஆண்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் அதிகமான ஆள்கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அது தெரிவித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத் தகவலின்படி, 2015ஆம் ஆண்டில் விகிதாசாரப்படி டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு 37 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில் நாட்டிலேயே ஆள் கடத்தலில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் இந்த விகிதம் ஒரு லட்சம் பேருக்குக் கிட்டதட்ட 6 பேராக உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 11,999 கடத்தல் வழக்குகளும் மகாராஷ்டிராவில் 8,255 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பீகாரில் 7,128, மத்தியப் பிரதேசத்தில் 6,778, மேற்கு வங்கத்தில் 6,115, அசாமில் 5,831, ராஜஸ்தானில் 5,426, அரியானா வில் 3,520, ஒடிசாவில் 3,236 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெரும்பாலான கடத்தல் சம்பவங்களில் சிறார்களே குறி வைக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 2015ஆம் ஆண்டு இந்தியாவில் 82,999 ஆள் கடத்தல் வழக்குகள் பதி வாகியுள்ளன. இவற்றில், 1,260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 774 பேர் மிரட்டிப் பணம் பறிப்பதற்காகக் கடத்தப்பட்டனர். 18,629 பேர் இதர காரணங்களுக்காகக் கடத்தப்பட்டு உள்ளனர். 31,884 பெண்கள் கட்டாய திருமணத்துக்காகக் கடத்தப்பட்டுள்ளனர்.

