புதுடெல்லி: ராஜஸ்தான்-ஹரியானா செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்த ஒருவர் பயணச்சீட்டுப் பரிசோதகரின் பணிக்கு டுவிட்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். முன்பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறிய ஒரு டிக்கெட் பரிசோதகர் அங்கு இருந்த அனைவரிடமும் இருக்கை வசதிக்காக தலா 15 ரூபாய் வசூலித்துக் கொண்டு இருந்தார். இதற்கு உரிய ரசீது தரும்படி கேட்டார் கோவிந்த் நாராயண் என்ற அப்பயணி. ஆனால் அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால், கோவிந்த் தனது டுவிட்டர் மூலம் பரிசோதகரின் இந்நடவடிக்கை பற்றி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பிரதமர் மோடி, ஜோத்பூர் வட்டார ரயில்வேத்துறை மேலாளர் ஆகியோருக்குத் தெரிவித்தார்.
ஜோத்பூரில் ரயிலில் ஏறிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த டிக்கெட் பரிசோதகரை சோதனையிட்டபோது அவர் வசமாக சிக்கிக் கொண்டார். இவ்விவரங்கள் உடனடியாக டுவிட்டர் மூலம் ரயில்வே மேலாளருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஷியாம்பால் என்ற அந்த டிக்கெட் பரிசோதகரை உடனடியாக இடைக்கால பணிநீக்கம் செய்யும்படி அவர் டுவிட்டர் மூலமாக உத்தரவிட்டார்.

