காவிரி நீர் பிரச்சினையால் தமிழக, கர்நாடக மாநிலங் களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் இறை தரிசனத்திற்கு வந்த கர்நாடக மாநிலத்தாரைப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, தரிசனத்திற்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பாக அனுப்பிவைத்த சம்பவம் தமிழகத்தின் ராமேசுவரத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள், தமிழக வாகனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட, அதன் எதிரொலி யாக ராமேசுவரத்திலும் கர்நாடகப் பதிவெண் கொண்ட ஏழு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், அங்கு கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
இந்த அசாதாரண சூழலுக்கு நடுவே, அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர் அங்குள்ள இந்து மக்கள் கட்சியினர். அங்கு வந்த கர்நாடக பக்தர்களைப் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்து, பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அண்டை மாநிலங்களாக இருந்தபோதும் தண்ணீருக்காக ஒருவர் மீது ஒருவர் விரோதம் பாராட்டிவரும் நிலையில் ராமேசுவரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கற்பிக்கும் வகையில் அமைந்தது.

