சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களைக் காப் பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கர்நாடகாவுக்கு துணை ராணுவப் படையை அனுப்பி தமிழர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டுமெனும் கோரிக்கை வலுத்து வருகிறது. நீர் திறப்பு விவகாரம் தொடர் பில் தமிழகம், கர்நாடகாவில் வன்முறைச் சம்பவங்கள் அரங் கேறக் கூடாது என திமுக தலை வர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை தேவை யற்றவை என்பதே தமது கருத்து எனக் கூறியுள்ளார். "கொண்டவன் சரியில்லை என்றால் கண்டவன் எல்லாம் கடுங்கோபத்துடன் காலால் எட்டி உதைப்பான் என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்த நிலைதான் தமிழர்களுக்கு ஏற்படுகிறது. "பெங்களூருவில் சந்தோஷ் என்ற இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அதுபோல் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தமிழர்கள் தாக்கப் படுவதாகச் செய்தி வெளிவரு கின்றன.
"அந்தச் செய்திகளைப் படித்துவிட்டு தமிழகத்திலும் பரவ லாக இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெறுவதாக வருகின்ற செய் திகள் பெரிதும் வருத்தத்தைத் தருகின்றன," என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனக் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். "இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு சம்பந்தப்பட்ட இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும். கர்நாடகாவில் வன்முறையைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ராணுவத்தை அனுப்ப வேண்டும். ராணுவத்தை அனுப்பி தமிழகத்திற்குரிய தண் ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், கர்நாடகாவில் அமை தியை ஏற்படுத்த இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகத் தமிழர்களைப் பாது காக்க மத்திய காவல் படையை அனுப்பவேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ள நிலையில், விடுலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமா வளவனும் இதே கருத்தை எதிரொலித்துள்ளார். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும், அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

