காவிரிப் பிரச்சினையில் கர்நாடக மாநிலத்தைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதையடுத்து கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அங்குள்ள தமிழக வர்த்தக நிறுவனங்கள் அடித்து நொறுக் கப்பட்டு சொத்துகள் சூறை யாடப்பட்டன. நூற்றுக்கணக் கான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதைக் கண்டித்து தமிழக விவசாய அமைப்புகளும் வர்த் தகச் சங்கங்களும் தமிழகத்தில் நேற்று முழு அடைப்புப் போராட் டத்திற்கு அழைப்பு விடுத்தன. ஆளும் அதிமுக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
போராட்டத்திற்கு ஒத்துழைக் கும் வகையில் லாரிகள், தனி யார் பேருந்துகள், ஆட்டோக்கள் போன்றவை நேற்று ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டும் இயங்கியதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. குறிப்பாக, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர் போன்ற காவிரி நீர் பாயும் டெல்டா மாவட்டங் களில் முழு அடைப்பின் தாக் கத்தை முழுமையாக உணர முடிந்தது. அங்கு சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். ஒரு சிலவற்றைத் தவிர தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப் பட்டன. திரைத்துறை அமைப்பு களும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்ததால் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
சாலைகளில் ஆர்ப்பாட்டத் திலும் ரயில் மறியல் போராட்டங் களிலும் ஈடுபட்டதற்காக அரசி யல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதே போல திமுகவினருடன் சேர்ந்து அண்ணா சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததற்காக கனி மொழி கைதானார். பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் மறியல் செய்ய முயன்றதற் காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை போலிசார் கைது செய்தனர். அதேபோன்று திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.
முழு அடைப்புப் போராட்டத் திற்கு மத்தியிலும் அரசுப் பள்ளி கள், கல்லூரிகள், அரசு அலுவ லகங்கள் இயங்கின. ஆயினும் அரசுப் பேருந்துகள் தவிர்த்து வேறு எவையும் இயக்கப்படாத தால் மாணவர்களும் அலுவல கம் செல்வோரும் பெரும் சிரமப் பட்டனர். புதுச்சேரியிலும் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. அங்கு அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதையடுத்து பின்னர் அவையும் இயக்கப்பட வில்லை. அங்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு முழு அடைப்புப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவிக்காவிட் டாலும் பரவாயில்லை, அதிமுக வினராவது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்திருக்கலாம் என விவசாயிகள் புலம்பினர். மாறாக, முன்னர் அறிவித்த படி உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்வை அக்கட்சி தொடங்கியது.

