புதுடெல்லி: வாகனங்கள் உற்பத்தியில் இந்தாண்டு இந்தியா உலக நாடுகள் மத்தியில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தனது நேரடிப் போட்டி நாடான தென்கொரியாவை இந்தியா ஆறாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது. ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் கார் உற்பத்தியில் உலக அளவில் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 2016ல் மட்டும் இன்றைய தேதி வரை இந்தியாவில் மொத்தம் 25.7 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் நேரடி போட்டி நாடான தென்கொரியாவில் ஹுன்டாய், கியா கம்பெனி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் ஆண்டுகளிலும் இந்தியா கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்க வாய்ப்புள்ளதாக பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பொருளியலில் மோட்டார் வாகனத் தொழில் 7 விழுக்காடு வகிக்கிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் கார் உற்பத்தித் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக மோட்டார் வாகன தொழிலில் மட்டும் இந்தாண்டு இறுதிக்குள் 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

