அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயல், எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்றும் சொல்லப்பட்டது. "கடந்த மூன்று நாட்களாக முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிமுக மூத்த தலைவர் பூங்குன்றனை சைகையால் அழைத்தார். முதல்வர் தொண்டையில் போடப்பட்டுள்ள துவாரம் வழியாகவே சுவாசித்து வருகிறார். இருப்பினும் சின்னச் சின்ன வார்த்தைகளில் மெதுவாகப் பேசினார்," என்று போயஸ் கார்டனைச் சேர்ந்த உதவியாளர்கள் குறிப்பிட்டதாக தமிழக செய்தி இணையப்பக்கம் தெரிவித்தது.
"திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் சிவக்குமார், சசிகலா உள்ளிட்டவர்களிடம் மிக மெதுவாக ஓரிரு வார்த்தைகளைப் பேசினார். முதல்வருக்குக் கை, கால்களில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைச் சரி செய்வதற்காக, தொடர்ந்து பிஸியோதெரபி சிசிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் வந்து சென்ற பிறகு, பிஸியோதெரபி சிசிச்சையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்" என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி, தேனியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் நேற்று அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் வழிபாடு நடத்தினர்.

