புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு அநீதி இழைத்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ சாடியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் அதிபர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தபோது முதலில் ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அதன் பின்பு முடியாது என்று உச்ச நீதிமன்றத்திலேயே மறுத்துவிட்டது எனச் சுட்டிக்காட்டினார்.
"அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற இன்றைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து நேரும் என்பதைக் கவலையோடு அதிபரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்," என்றார் வைகோ.

