64 ஆண்டுகளாக தீபாவளிக்கு ஒரே சட்டை; நட்பை மறவா நாகு தாத்தா

64 ஆண்டுகளாக தீபாவளிக்கு ஒரே சட்டை; நட்பை மறவா நாகு தாத்தா

2 mins read
0342ce50-087e-49b1-af40-e8308056a51b
-

தீபாவளிப் பண்டிகைக்காக பிள்ளைகளும் பேரன், பேத்திகளும் பட்டாடைகளை எடுத்துத் தந்தாலும் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கடந்த 64 ஆண்டுகளாக அந்த நன்னாளில் குறிப்பிட்ட ஒரு சட்டையை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த திரு நாகுப்பிள்ளை, 87 (படம்). 1952ஆம் ஆண்டு திரு நாகுப்பிள்ளைக்குத் தலைதீபாவளி. ஆயினும் மாமனார் வீட்டில் வாங்கிக்கொடுத்த ஆடைகளை அணியாமல் தமது நண்பர் சீனி வாங்கிக் கொடுத்த சட்டையையே இவர் அன்று அணிந்தார். அன்று மட்டுமல்ல! இன்று வரை தீபாவளியன்று அந்த இளஞ்சிவப்பு நிறச் சட்டையையே அணிந்து வருகிறார் இவர். 1972ல் நண்பர் சீனி இறந்தபின்னும் அப்பழக்கத்தை இவர் கைவிடவில்லை.

தாங்கள் வாங்கிக் கொடுக்கும் புத்தாடைகளை தீபாவளி நாளன்று திரு நாகுப்பிள்ளை அணிவதில்லை என்ற வருத்தம் இருந்தாலும், நண்பரை உயிரினும் மேலாகக் கருதி, நட்புக்கும் அன்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்து வரும் இவரை நினைத்து அவருடைய குடும்பத்தினர் பெருமிதம் கொள்கின்றனர். "நாங்கள் எடுத்துத் தரும் ஆடைகளைத் தீபாவளிக்கு அணியுங்கள் என்று சொன்னால் கேட்கமாட்டார். இன்று ஒருநாள் என் விருப்பப்படி விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிடுவார். நட்புக்கு அவர் காட்டும் மரியாதையை நாங்கள் வியப்புடனேயே பார்க்கிறோம்," என்று 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிடம் சொன்னார் திரு நாகுப்பிள்ளையின் இளைய மகன் திரு பிரபாகரன்.

தனது தாத்தாவின் விடாப்பிடியான கொள்கையைக் கண்டு பிரமித்துப் போன பேரன் சீனிவாசன், இப்போது தானும் தன் நண்பனும் சேர்ந்து ஒரே மாதிரியான சட்டைகளை வாங்கியுள்ளதாகக் கூறினார். அதுபோல, தாத்தாவின் பழக்கத்தைத் தாங்கள் தொடருவோம் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.