உணவில் கரப்பான் பூச்சி; விசாரணை நடத்தும் ஏர் இந்தியா

1 mins read

புதுடெல்லி: அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவருக்குப் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வரும் ஏர் இந்தியா உணவைத் தயாரித்த நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து புதுடெல்லி சென்று அங்கிருந்து சிக்காகோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தமக்குப் பரிமாறப்பட்ட உணவில் மாண்டு கிடக்கும் கரப்பான் பூச்சி இருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்றை அந்தப் பயணி டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அந்தப் பயணிக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.