புதுடெல்லி: மற்றவர்களின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்துபவர்கள் மீதும் அதற்கு வங்கிக் கணக்கு வழங்கி உதவுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். கறுப்புப் பணம் பதுக்குவோர், ஹவாலா தரகர்கள் ஆகியோர் குடும்பத் தலைவியரின் வங்கிக் கணக்குகள், மத்திய அரசால் மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஜன்தன் கணக்கு ஆகியவற்றைக் குறிவைத்துப் பணத்தை மாற்றுவது புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சு எச்சரித் துள்ளது. இதற்கிடையே, கறுப்புப் பணத்தைத் தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாக மக்களவை யில் தெரிவித்த மத்திய நிதியமைச்சர், இத்திட்டத்திகீழ் வரி வருவாயாக இதுவரை 29,362 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகத் தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற் காக 'பழைய ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லுபடியாகமாட்டா' எனும் அறிவிப்பை பிரதமர் மோடி மிகவும் ரகசியமாக வைத்திருந்த தாகவும் முக்கிய வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்குக்கூட இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை எனவும் வங்கி அதிகாரிகளே தெரிவித் துள்ளனர்.
ரூபாய் நோட்டுகள் குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பைக் கண்டித்து இளையர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது போலிசார் தண்ணீர் பீய்ச்சி கூட்டத்தைக் கலைத்தனர். படம்: ஏஎஃப்பி

