'மல்லையாவின் கடனைப் போல் என் கடனையும் வங்கி ரத்து செய்யவேண்டும்'

'மல்லையாவின் கடனைப் போல் என் கடனையும் வங்கி ரத்து செய்யவேண்டும்'

2 mins read

மும்பை: மல்லையாவின் கடனை ரத்து செய்யத் துணிந்தது போல் நான் வாங்கிய கடனையும் வங்கி ரத்து செய்ய முன்வர வேண்டும் என்று துப்புரவு ஊழியர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா செலுத்தவேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் தொகையைத் தள்ளுபடி செய்தது போல் என் மகனின் சிகிச்சை செலவுக்காக வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனையும் தள்ளு படி செய்துவிடுங்கள் என ஸ்டேட் வங்கி நிர்வாகிக்குத் துப்புரவு ஊழியர் ஒருவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

மராட்டிய மாநிலம், நாசிக் மாவட்டம், டிரையாம்பகேஷ்வர் நகராட்சி நிர்வாகத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் பவ்ராவ் சோனாவானே. இவர் ஸ்டேட் வங்கி கிளை நிர் வாகிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "விஜய் மல்லையாவின் கடன் தொகையைத் தள்ளுபடி செய் திருப்பது நல்ல முடிவுதான். அதே போல் என் மகனின் சிகிச்சை செலவுக்காக நான் வாங்கிய ஒன்றரை லட்சம் ரூபாய் கடனையும் தள்ளு படி செய்துவிடுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கடிதத்துக்கு இன்னும் வங்கியின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை எனத் தெரிகிறது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ், மதுபான ஆலை உள்ளிட்ட பல் வேறு தொழில்களில் ஈடுபட்டுவந்த விஜய் மல்லையா, அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டுத் தப்பிச்சென்று லண்டனில் வசித்து வருகிறார்.

இந்தப் பல்லாயிரம் கோடி கடன் தொகையில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கிக்கு மட்டும் விஜய் மல்லையா 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ளார். விஜய் மல்லையா உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் செலுத்த வேண்டிய கடன்தொகையான 7,000 கோடி ரூபாயை ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளி யானது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை, வராக்கடனாக பதிவு செய்யப்பட் டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.