வேலூர்: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதும் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுமார் 1 கோடிக்கு தங்க நகைகளை வாங்கியதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 24ஆம் தேதி அந்த தொழிலதிபரின் வீடு, கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதாகவும் அப்போது, வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த பாதாள ரகசிய அறையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பாதாள அறைக்குள் நுழைந்தபோது கோடிக்கணக்கான பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், முக்கிய ஆவணங்களைப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. அந்தத் தொழிலதிபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் சில தொழிலதிபர்களையும் வருமான வரித்துறை கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

