கனத்த மழை: அந்தமானில் 800 பயணிகள் தவிப்பு

கனத்த மழை: அந்தமானில் 800 பயணிகள் தவிப்பு

1 mins read

போர்ட்பிளேர்: அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவில் பெய்து வரும் கனத்த மழை, புயல் காற்றின் காரணமாக 800 சுற்றுப்பயணிகள் அங்கு சிக்கிக்கொண்டு அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களை மீட்பதற்கு உதவும் வகையில் நான்கு கப்பல்களை கடற்படை அங்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மீட்புப் பணி நேற்று மாலை வேளையில் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த கனத்த மழை, புயலில் அந்த மானுக்குச் சுற்றுலா சென்ற பயணிகளின் படகு ஒன்றும் சிக்கியது.

படகில் சிக்கியவர்களையும் சேர்த்து சுமார் 800 சுற்றுலாப் பயணிகள் அவதிப் படுவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட கடற்படையினர் விரைந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் சிக்கித் தவித்து வரும் ஹேவ்லாக் தீவுக்குக் கடற்படையின் பித்ரா, பங்காராம், கும்பிர் உள்ளிட்ட கப்பல்கள் விரைந்துள்ளன. அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரைகள் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. ஹேவ்லாக் தீவும் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் இந்த ஹேவ்லாக் தீவு உள்ளது.