சென்னை: சட்டப்பேரவையில் அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர் செங்கோட்டையன் வகுத்த திட்டங்களே வெகுவாகக் கைகொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலர் சசிகலா வெகுவாகப் பாராட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், வாக்கெடுப்பை எப்படி நடத்த வேண்டும், அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து செங்கோட்டையனே திட்டங்களை வகுத்தார் என்று தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பின்போது எத்தகைய சம்பவங்கள் அரங்கேறும் என யூகித்து, அவற்றின் அடிப்படையில் முன்கூட்டியே செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அதிமுகவினர் ஒத்திகையும் பார்த்ததாகத் தெரிவிக்கிறது. "இப்படி ஒவ்வொரு நிமிடமும் அதிமுக தரப்பில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டுக் கொடுத்து அதில் வெற்றியும் பெற்ற செங்கோட்டையனை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வெகுவாகப் பாராட்டி உள்ளார்," என தமிழக ஊடகம் மேலும் கூறியுள்ளது.

