மும்பை: மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரது மனைவி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் தனது மகனைப் பார்த்துக்கொள்ள யாருமின்றி அவனை மடியில் போட்டுக் கொண்டு மும்பை எங்கும் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதைக் கண்டு மும்பை மக்கள் பலரும் அவருக்காக நிதி திரட்டி உதவ முன்வந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த சயீத்-யாசிம் தம்பதிக்கு ஒரு மகனும் 3 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது.
யாசிமை பக்கவாதம் தாக்கியதால் அவரால் தனது பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க முடியவில்லை. இந்தத் தம்பதிக்கு உறவினர்களும் கிடையாது. ஆட்டோ ஓட்டினால்தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்கமுடியும். மூன்று மாதக் குழந்தையைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துக்கொள்ள மகனை என்ன செய்வது என்று தெரியாமல் தம்முடனே வைத்துக்கொள்ள முடிவெடுத்தார். வாடிக்கையாளர்கள் வந்தால் மகனை முன் இருக்கையில் தன்னுடன் வைத்துக்கொள்வார். ஆட்டோவில் வந்த வினோத் என்ற பயணி புகைப்படத் துடன் சயீத்தின் தொலைபேசி எண், வங்கிக் கணக்கு விவரங்களைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, சயீத்தின் மனைவிக்குத் தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்துள்ளன.

