பொள்ளாச்சி: இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய தடை விதித்திருப்பதையடுத்து மத்திய அரசுக்கு நாடு முழுவதும் பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் பிரதமருக்கு மாட்டுக்கறி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரை பொள்ளாச்சி போலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட அமைப்பாளர் தம்பு தலைமையில் அந்த அமைப்பினர் திரண்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும், தபால் நிலையம் முன்பு அடுப்பு மூட்டி பாத்திரத்தில் மாட்டுக்கறியைப் போட்டு சமைக்க முயன்றதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் 37 பேரை கைது செய்ததுடன், இறைச்சியையும் அடுப்புடன் சேர்த்து பறிமுதல் செய்தனர். மத்திய அரசு தடை உத்தரவை நீக்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இப்போராட் டம் காரணமாக பொள்ளாச்சியில் பரபரப்பு நிலவியது.

