இந்தியா செல்லும் தம் குடிமக்களுக்கு சீனா பாதுகாப்பு அறிக்கை

1 mins read

சிக்கிமில் உள்ள இந்தியா-சீனா-பூட்டான் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் டோக் லா எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதை அடுத்து அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. டோக் லா பகுதியில் இருக்கும் இந்திய வீரர்களை அங்கிருந்து வெளியேறும்படி சீனா கோரி வருகிறது. அங்கு சாலைகள் அமைக்க சீனா முயன்றதை அடுத்து இந்திய வீரர்கள் அண்மையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை அடுத்து, இந்தியாவுக்குச் செல்லும் சீனப் பயணிகளுக்குப் பாதுகாப்பு ஆலோசனையைச் சீனா வழங்கியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் வழியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டது. எல்லைப் பகுதியில் நடைபெறும் பாதுகாப்பு நிலை குறித்து அணுக்கமாகக் கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.