சென்னை: மேக வெடிப்பு ஏற்பட்டது போல் கொட்டித் தீர்த்த கனமழையானது சென்னை மாநகர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 7 சென்டி மீட்டர் மழை பெய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களாகத் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் ஓரிரு தினங்கள் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை சென்னையின் சில பகுதிகளில் மேக மூட்டம் நிலவியது. பின் னர் லேசாக பெய்யத் தொடங்கிய மழையானது, இரவு 10 மணியளவில் வலுவடைந்தது. அச்சமயம் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குப் பெய்த கன மழையால் சாலையில் மழைநீர் வெள்ளமெனப் பெருகி ஓடியது. இதனால் வாகன மோட்டிகள் சிரமப்பட்டனர்.
முதல் 10 நிமிடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பொழிந்த தாகவும் ஒரு மணி நேரத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்தன. மேகத்தில் வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியதுபோல் உணர்ந்தோம். அந்த அளவிற்கு வானில் இருந்து மழை நீர் அசுர வேகத்தில் கொட்டித் தீர்த்தது என்று சென்னை மக்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர். இந்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு அப் பகுதிகள் இருளில் மூழ்கின. இந்த ஆண்டில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.
இதற்கிடையே பிராட்வே பகுதியில் மழையில் நடந்து சென்றபோது அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்த இளைஞர் ஒருவர் பலியானார். அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மீத்துகுமார் சிங் என்று தெரியவந்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. அண்மைய சில தினங்களாக சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் கனமழை பெய்திருப்பது தண்ணீர்ப் பிரச்சி னையை ஓரளவு தீர்க்கக்கூடும் என்கிறார் நீர்வள நிபுணர்கள்.

