திருவாரூர்: அதிமுகவும், தமிழக ஆட்சியும் சசிகலாவின் குடும்பத்தினரிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற அவரது அணியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்றார். இதற்காக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாகச் சாடினார்.
"இருவரும் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். சட்டப்பேரவையிலோ, வெளியிலோ முதல்வர் பழனிசாமி சிரித்துப் பேசி நான் பார்த்ததில்லை, அவரைச் சிரிக்க வைத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு தருகிறேன்," என்றார் பன்னீர்செல்வம். செய்தியாளர்கள் எவரும் முதல்வரிடம் ஏன் பேட்டி கேட்பதில்லை? எனக் கேள்வி எழுப்பிய அவர், ஒருவேளை பேட்டி கண்டாலும் கூட பழனிசாமி ஏதும் பேசமாட்டார் என்றார்.

