சென்னை: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவியதன் காரணமாகவே காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை நிலவுகிறது என அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை விளையும் என்றார். மேகதாதுவில் அணை கட்டப்போவது உறுதி என்றும் அந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை எனவும் கவுடா திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
"மேகதாதுவில் அணை கட்டி முடிக்கப்பட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை நாங்கள் திறந்துவிடுவோம். தற்போதைய சூழ்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் இதற்கு மேல் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை," என்றார் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா.

