இன்று முதல் அட்மிரல்டி, பிடோக், புக்கிட் பாஞ்சாங், போன விஸ்தா, ஃபேரர் பாக், ஹார்பர் ஃபிரண்ட், ஹவ்காங், லேக்சைட், பாசிர் ரிஸ், சிராங்கூன், இயூ டீ ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முகப்பு சேவைகளில் ஈஸிலிங் அட்டைகளில் பணம் நிரப்ப ரொக்கப் பணத்தைப் பயன்படுத்த முடியாது. 2020ஆம் ஆண்டு வாக்கில் ரொக்கமற்ற பொதுப் போக்குவரத்து முறையை எட்டும் இலக்கின் ஒரு பகுதியாக இந்தச் செயல்பாடு நடைமுறைக்கு வருகிறது.
எனினும், இங்குள்ள டிக்கெட் இயந்திரங்களில் ரொக்கம் மூலம் பணம் நிரப்பலாம். இயந்திரங்களில் ரொக்கம் மூலம் ஈஸிலிங் அட்டைகளில் பணம் நிரப்ப இந்த நிலையங்களில் பயணிகளுக்கு உதவியாளர்கள் உதவி வருகின்றனர். அடுத்த ஆண்டிலிருந்து அனைத்து ரயில் நிலையங்களின் முகப்புகளிலும் ரொக்கம் மூலம் ஈஸிலிங் அட்டையில் பணம் நிரப்பும் சேவை நிறுத்தப்படும். 2020லிருந்து அனைத்து எம்ஆர்டி நிலையங்களில் உள்ள டிக்கெட் இயந்திரங்களிலும் ரொக்கமற்ற முறையில், கடன் அட்டை, நெட்ஸ் போன்றவை மூலமே ஈஸிலிங் அட்டைகளில் பணம் நிரப்பலாம்.

