சென்னை: மாணவி அனிதாவின் மரணம் குறித்து, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தமிழக பாஜக தலைவி தமிழிசை சில கேள்விகளை எழுப்பி உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழிசைக்கு மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார். "மாநில பாடத்திட்டத்தில் படித்த, தமிழக மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகளைக் கேட்டது யார்?
"தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக நீதி என்ற அடிப்படைக் கல்விக் கொள்கை பின்பற்றப்படுவதை முழுவதுமாக புறக்கணிக்கும் மத்திய கல்விக் கொள்கையை திணிப்பது ஏன்?," என கேள்விகளை அடுக்கி உள்ளார் விஜயதாரணி. மேலும், கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்டத்தை அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் மாநிலத்திற்கான உரிமைகளை பறிப்பது யார்? என்றும் கேட்டுள்ளார்.

