மதுரை: அகழாய்வு நடைபெற்ற இடங்களை மூட வேண்டிய அவசியம் இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கனிமொழிமதி என்பவர் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரிக்கும் போதே நீதிபதி கள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். கீழடியில் கடந்த பல மாதங்களாக அகழாய்வு நடை பெற்று வருகிறது. இந்நிலை யில் தென்மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை காரணமாக அகழாய்வு நடைபெறும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கனிமொழி மதி தாக்கல் செய்த மனுவில் அகழாய்வு நடைபெறும் இடத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அகழாய்வு நடைபெறும் இடத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், அந்த இடத்தை மூடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர். "சிறப்புமிக்க மொகஞ்சதா ரோவில் அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்படாமல் தான் உள்ளது. கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தை அரசு வழக்கறிஞர்கள் குழு பார்வையிட வேண்டும். அங்குள்ள வசதிகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்," எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

