நல்லகண்ணு: அதிமுக, பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது

நல்லகண்ணு: அதிமுக, பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது

1 mins read

சென்னை: நீட் தேர்வை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருவது கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராடுவதற்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்றார். அதிமுகவில் தற்போது ஒற்றுமை இல்லாத காரணத்தால், தொடர்ந்து உட்கட்சிப் பூசல்கள் வலுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த சூழ்நிலையை மத்திய பாஜக அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

"மத்திய அரசு மருத்துவமனைகளான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு கிடையாது. தமிழகத்தில் மாநில அரசின் கருத்துகளைக் கேட்காமலேயே நீட் போன்ற தேர்வுகளை மத்திய அரசு வற்புறுத்தி திணித்து வருவது கண்டிக்கத்தக்கது. "பாரதிய ஜனதா கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையே மறைமுக உறவு தொடர்கிறது. அதிமுகவின் உட்கட்சிப் பூசல்களும் அக்கட்சியில் அமைதி நிலவாததும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது," என்றார் நல்லகண்ணு. மக்கள் போராட்டத்தை அரசுகள் ஒடுக்க நினைப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் நியாயமான உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் அரசுகள் மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் என்றார்.