பட்டதாரி ஆக்கிய கணவரை ஏமாற்றி 2ஆவது திருமணம் செய்த பெண்

பட்டதாரி ஆக்கிய கணவரை ஏமாற்றி 2ஆவது திருமணம் செய்த பெண்

1 mins read

நெல்லை: திருமணத்துக்குப் பின் லட்சக்கணக்கில் பணம் செல விட்டு தன்னை பொறியியல் பட்டதாரி ஆக்கி அழகுபார்த்த கணவரையே ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் ஒரு பெண். நெல்லையைச் சேர்ந்த குமார் (30 வயது), எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவருக்கும் 2010ல் திருமணம் நடந்தது. அப்போது 12ஆம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த தனலட்சுமி, பொறியியல் படிக்க விரும்பியதால் அவரை சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார் குமார்.

இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் மெக்கானிக்கான இவர், இதற்காக தனது நிலம், நகைகளை விற்றதுடன் கூடுதலாகவும் உழைத்துள்ளார். பட்டதாரி ஆன பின்னர் பொறியியல் துறையிலேயே மேற்படிப்பை மேற்கொள்வதாகக் கூறி சொந்த ஊர் சென்ற தனலட்சுமியின் மனம் மாறியுள்ளது. அவருக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க விரும்பியுள்ளார் அவரது தாய். தனலட்சுமியும் அதற்கு சம்மதிக்க, முதல் கணவர் இறந்துவிட்டதாகக் கூறி அவருக்கு வேறு ஒருவருடன் அண்மையில் இரண்டாவது திருமணம் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து சில தினங்களுக்கு முன் தெரிய வந்தபோது, கடும் அதிர்ச்சியில் மூழ்கிய குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.