தகுதி நீக்கம்: சட்டப்படி எதிர்கொள்ள முடிவு

தகுதி நீக்கம்: சட்டப்படி எதிர்கொள்ள முடிவு

2 mins read
0281e00f-a4ea-45ef-8534-e71886e7549d
-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நேற்று சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய தினகரன், 'தைரியமாக இருங்கள். நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் கூறியிருக்கிறார். கர்நாடக சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்களுக்கு இது குறித்த தகவல் தெரிந்ததும் சிலர் சோகத்தில் மூழ்கினர். தினகரனை ஆதரித்த ஜக்கையன் எம்எல்ஏ மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தகுதி நீக்க அறிவிப்பு வெளியானதும், தினகரன் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல், "இந்தத் தகுதி நீக்கம் செல்லாது," என்று ஆவேசமாகக் கூறியதாக சொல்லப்படுகிறது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவரின் ஆதரவாளர், "தகுதி நீக்க அறிவிப்பு வெளியானதும் தொலைபேசி வழி எம்எல்ஏவுடன் பேசினேன். அப்போது, அவரது குரல் உடைந்திருந்தது. எம்எல்ஏ வுக்குப் போட்டியிட்டபோது செலவழித்த தொகை, அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில் கதறி அழும் சத்தம் கேட்டது," என்றார். பெண் எம்எல்ஏ உட்பட முதல் முறையாக எம்எல்ஏ ஆன மூவர் பெரும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக் கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகரின் நடவடிக்கைக்குத் தடை பெற மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியதோடு தகுதி நீக்கத் துக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், திருச்சியில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகாவிலிருந்து இன்று இரவு புறப்பட இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.