புரட்டாசி மாத விரதம் எதிரொலி; அசைவ உணவகங்களுக்குப் பாதிப்பு

புரட்டாசி மாத விரதம் எதிரொலி; அசைவ உணவகங்களுக்குப் பாதிப்பு

1 mins read

சேலம்: புரட்டாசி மாத விரதம் காரணமாக அசைவ உணவகங்களில் 40 விழுக்காடு அளவிற்கு விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தில் இருந்து தப்பிக்க, 20 விழுக்காடு உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட உணவு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் 1.50 லட்சம் உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதில் 30 விழுக்காடு உணவகங்கள் அசைவ உணவு மட்டுமே விற்பனை செய்கின்றன. "புரட்டாசி மாதத்தில், அசைவ உணவகங்களில் விற்பனை சரிந்து, மந்த நிலை ஏற்படுவது வழக்கம். கடந்த 2016 புரட்டாசியில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அசைவ உணவகங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை; மாறாக வியாபாரம் சூடுபிடித்தது," என்கிறார் பழனிசாமி. ஆனால், நடப்பாண்டில் புரட்டாசி மாதம் பிறந்தபின், அசைவ உணவகங்களில் விற்பனை அளவு 40 விழுக்காடு சரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணியாற்றுவோர் சொந்த ஊர் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.