தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்கும்படி சபா நாயகர் தனபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆதலால் அவருக்கு வழங்கிவரும் ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம்' எனக் கூறி, டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக் கள் 18 பேர் பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால், ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகக் கூறி, அவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்வ தாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய் ததுபோல், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை யும் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் திமுக தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல, சபாநாயகர் தங்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கும்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தன.

