கோவை: தமிழகத்தில் இதுவரை டெங்கி காய்ச்சலால் எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்பது குறித்து தமிழக அரசு கணக்கிடவில்லை என்று திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கி காய்ச்சலால் ஏற்படும் உயிர் இழப்புகள் அதிகமாகி வருவதாகக் கவலை தெரிவித்தார். "உண்மை நிலவரம் என்ன என்பதை இந்த அரசு வெளியே சொல்லாமல் மூடிமறைக்கிறது. டெங்கி காய்ச்சல் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதில்கூட அரசு அக்கறை காட்டவில்லை. காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை," என்றார் கனிமொழி.
இந்நிலையில், உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கி காய்ச்சல் அதிக அளவில் பரவக் காரணம் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஏராளமான பகுதிகளில் டெங்கி மற்றும் வி ஷக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும் தமிழக அரசு இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

