இந்தியாவின் 20 முன்னணி பல்கலைக்கழகங்களை உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெறச் செய்யும் நோக்கத்துடன் அவற்றுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கவும் ரூ.10,000 கோடி (S$2.08 பில்லியன்) நிதியுதவி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித் துள்ளார். உலகின் சிறந்த 500 பல் கலைக்கழகங்கள் பட்டியலில் ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட இடம்பெறாத நிலையில் மோடி யின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பத்து தனியார் பல்கலைக்கழகங்களை யும் 10 அரசுப் பல்கலைக்கழகங் களையும் உலகத் தரமானதாக மாற்ற தமது அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார். "உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் இந்தியப் பல்கலைக்கழகம் எதுவுமில்லை. இந்தக் கறையை நாம் துடைத்து அழிக்க வேண்டும். மனஉறுதி யுடன், கடுமையாக உழைத்து இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்," என்று மோடி முழங்கினார்.
"இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் (ஐஐஎம்) மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, அவற்றுக்கு அதிக அதிகாரம் வழங்கும் முக்கியமான முடிவை எமது அரசாங்கம் எடுத்துள்ளது. அதுபோல, மற்ற பல்கலைக்கழகங் களுக்கும் அதிக அதிகாரம் வழங்கி, அவற்றை உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங் களுக்குள் இடம்பெறச் செய்வதை உறுதிசெய்வோம்," என்று மோடி பேசினார். "பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அங்கீகாரம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இனி இருக்காது. நாங்கள் முன்னோக் கிய சிந்தனையுடன் செயல்படு கிறோம். அடுத்த ஐந்தாண்டு களுக்கு பத்து தனியார், பத்து அரசாங்கப் பல்கலைக்கழகங் களுக்கு ரூ.10,000 கோடி நிதி உதவி வழங்க இருக்கிறோம். தங்களது ஆற்றல் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி தங்களை உலகத் தரமிக்க கல்வி நிலையங்களாக மாற்றும் முயற்சி களை அந்தப் பல்கலைக்கழகங் கள் முன்னெடுக்க வேண்டும்," என்றும் மோடி கேட்டுக்கொண் டார்.

