நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் கிராமத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் துக்குச் சொந்தமான பணிமனை யின் கூரை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விழுந்து நொறுங்கியதில் கட்டடத்திற்குள் தூங்கிக்கொண்டிருந்த நடத்துநர், ஓட்டுநர்கள் எட்டுப் பேர் பலியாகினர். காயமடைந்த ஐவர் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கனி, மணிவண்ணன், தனபால், பிரபாகரன், பாலு, சந்திரசேகர், முனியப்பன் ஆகிய ஏழு ஓட்டுநர்களும் ராமலிங்கம் என்ற நடத்துநரும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்ததாகச் சொல் லப்பட்டது.
இதில் பிரபாகரன், பாலு இருவரும் சகோதரர்கள். அதிகாலை வேளையில் பேருந்துகளை இயக்குவதற்காக அவர்கள் பணிமனையிலேயே தூங்கியதாகச் சொல்லப்படுகிறது. மொத்தம் 28 பேர் கட்டடத் தினுள் படுத்திருந்த நிலையில் மின்சாரம் தாக்கியதை உணர்ந்து தூக்கத்திலிருந்து எழுந்த கல்யாணசுந்தரம் என்பவர் மற்ற வர்களையும் எழுப்பி கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு சத்தம் போட்டதாக விபத்திலிருந்து தப்பிய ஒருவர் கூறினார். அதிகாரி களின் அலட்சியம்தான் உயிரிழப்பு களுக்குக் காரணம் என்றும் அதி காரிகளைக் கைது செய்ய வேண் டும் என்றும் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1943ஆம் ஆண்டில், சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்ட அந்த இரண்டுமாடிக் கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கி மாண்டுபோன அனைவரது சடலங்களையும் தீயணைப்பு, மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து அகற்றிவிட்டதாகக் கூறப்பட்டது. படம்: தமிழகத் தகவல் சாதனம்

