மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

1 mins read

வாணியம்பாடி: மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரியை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் ஷாகிப் தமது புதிய வீட்டுக்கு மின் இணைப்புக் கேட்டு ஆலங்காயம் மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலு புதிய மின் இணைப்புக் கட்டணம் உள்பட கூடுதலாக ரூ.6,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை விரும்பாத அப்துல் ஷாகிப், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதையடுத்து நேற்றுக் காலை ரசாயனம் தடவிய ரூ.6,000 ரொக்கப் பணத்தை அப்துல் ஷாகிப் பிடம் கொடுத்து காவல்துறையினர் அனுப்பினர். அதிகாரி பாலுவிடம் லஞ்ச பணத்தைக் கொடுத்தபோது அங்கு சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக அதிகாரி பாலுவை பிடித்துக் கைது செய்தனர்.