மதுரை: அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பிரதமர் மோடி திட்டமிடுவதாக அக்கட்சி எம்எல்ஏ ஏ.கே.போஸ் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படுவதாகவும் சாடினார். "அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தைப் பிளவுபடுத்த பிரதமர் மோடி நினைக்கிறார். அவருக்கு இந்தத் தைரியம் எங்கிருந்து வந்தது? "அதிமுகவில் உள்ள எட்டப்பர்கள், ஊடுருவிகள் தான் இதற்கு காரணம். அவர்களைக் கட்சியில் இருந்து களை எடுக்க வேண்டும்," என்றார் ஏ.கே.போஸ்.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்களுக் காகச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடியோ தமிழக அரசைக் குறுக்கு வழியில் என்னென்னமோ செய்து ஆட்டிப்படைத்து வருவதாகக் குறை கூறினார். "இதற்கு நாம் யாரும் துணை போகக் கூடாது. அதிமுக தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் சிறப்போடும் பொலிவோடும் திகழ நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். "இந்த ஆட்சியையும் கட்சியையும் கெடுக்கும் நோக்கத்தில் செயல்படு வதை விட்டுவிட்டு ஒற்று மையுடன் பணியாற்ற வேண்டும்," என ஏ.கே. போஸ் வலியுறுத்தினார். அதிமுக எம்எல்ஏ பிரதமர் மோடியைப் பகிரங்கமாகச் சாடியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2017-10-22 06:00:00 +0800

