தீபாவளிக்கு மத்தாப்பு கொளுத்திய மாணவர்களுக்குத் தண்டனை

தீபாவளிக்கு மத்தாப்பு கொளுத்திய மாணவர்களுக்குத் தண்டனை

1 mins read

மத்தாப்புக் கொளுத்தி தீபாவளித் திருநாளைக் கொண்டாடிய மாணவர்களைத் தண்டித்ததாக திருச்சியில் சிறுபான்மையினர் நடத்திவரும் ஒரு தனியார் பள்ளி மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து பள்ளி தொடங்கியதும் காலைநேர ஒன்றுகூடலின்போது, "தீபாவளியின்போது மத்தாப்புக் கொளுத்தியவர்கள் எல்லாரும் கையை உயர்த்துமாறும் அந்த மாணவர்கள் மட்டும் தங்கள் செயலுக்கு வருந்தி, கடவுளிடம் மன்னிப்புக் கேட்கும் வகையில் தலையைக் குனிந்து நிற்குமாறும்" அறிவுறுத்தப்பட்டதாகப் பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்தாப்புக் கொளுத்தாத மாணவர்களுக்குப் பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவர் ஒருவர், பள்ளியில் நடந்ததைப் பற்றி தன் தந்தையிடம் சொல்ல, கொதித்தெழுந்த அந்தத் தந்தை போலிசிடம் புகார் அளித்தார். இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியரையும் உடற்கல்வி ஆசிரியரையும் போலிஸ் விசாரித்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அப்படி நடந்துகொண்டதாக அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, கையில் மருதாணியிட்டதற்காக தன் மகளைப் பிரம்பால் அடித்தார் என்று இன்னொரு பெற்றோரும் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீது போலிசில் புகார் கொடுத்துள்ளனர்.