இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகம் ஆகியவற்றின் விளை வாக அந்நாட்டு பொருளியல் வளர்ச்சி நான்காண்டுகள் காணாத சரிவைச் சந்தித்துள்ள தாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பாஜக தலைமையிலான மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கிட்டத் தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு சரக்கு சேவை வரி என்று இந்திய அரசாங்கத்தால் பெயர் சூட்டப் பட்ட ஜிஎஸ்டி ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த இரு நடவடிக்கைகளும் நடப்பு நிதியாண்டின் பொருளியல் வளர்ச்சியை நான்காண்டுகளில் காணாத அளவுக்கு மெதுவடையச் செய்துவிட்டதாக ஆய்வு குறிப் பிட்டது.
மேலும், வர்த்தக நடவடிக்கை களை அவை சீர்குலைத்ததோடு பயனீட்டாளர் தேவையை தளரச் செய்துவிட்டதாகவும் ஆய்வறிக் கை தெரிவித்தது. இதன் காரணமாக ஆசியா வின் மூன்றாவது பெரிய பொரு ளியல் நாடான இந்தியா மார்ச் 2018 வரையிலான நடப்பு நிதியாண்டில் 6.7 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி அடையும் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2014-=15 நிதியாண்டில் புதிய பொருளியல் அளவீட்டு செயல்முறை அறிமுகம் கண்ட பின்னர் ஆக மெதுவான வளர்ச்சி இது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இம்மாதம் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் 30 பொருளியல் நிபுணர்களிடம் ஆய்வை மேற்கொண்டது.

