'மோடியின் உத்திகளைப் பயன்படுத்தும் ராகுல்'

'மோடியின் உத்திகளைப் பயன்படுத்தும் ராகுல்'

2 mins read

குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார பாணியை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பின்பற்று வதாகக் கூறப்படுகிறது. சௌராஷ்டிரா தவிர குஜராத்தின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் நான்கு முறை ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர் களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.

இதுவரை நான்கு முறை அத்தகைய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுலின் பிரசாரம் பிரதமர் மோடியையே மிஞ்சி இருப்பதாக கவனிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர். பிரசாரக் கூட்டம் ஒன்றில், "மோடி அளவுக்கு என்னால் உரையாற்ற இயலாது. அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்," என்று ராகுல் குறிப்பிட்டிருந்தாலும் மேடைப்பேச்சுக்குத் தேவையான திறன்களில் சிலவற்றை மோடியிட மிருந்து அவர் கற்றுக்கொண்ட தாகவே கூறப்படுகிறது.

மோடி, கெஜ்ரிவால் ஆகியோ ரின் தேர்தல் பிரசார உத்திகள் பற்றி 'ஸ்விங்ஙிங் தி மேன்டேட்' எனும் புத்தகத்தை எழுதியவர் களுள் ஒருவரும் அகமதாபாத் இந்திய நிர்வாகக் கழகத்தின் பேராசிரியருமான திரு தீரஜ் ஷர்மா, "மேடைப்பேச்சுக்கு நடுவே பார்வையாளர்களுடன் உரையாடி அவர்களது கவனத்தை ஈர்ப்பது, மக்களோடு 'செல்ஃபி' எடுத்துக் கொள்வது, கூட்டத்தாரிடையே பிரசாரப் பொருட்களை விநியோகிப் பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களிடையே தம்மை பிரபலப்படுத்த ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். முந்தைய தேர்தல் பிரசாரங்களில் மோடி இத்தகைய நடவடிக்கை களில் ஈடுபட்டார்," என்று கூறியுள்ளார்.

மோடியைப் போலவே ராகுலும் பிரசாரத்துக்கு இடையே கோயிலுக் குச் செல்வதையும் கவனிப்பாளர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், ராகுல் கண்மூடித் தனமாக எதையும் செய்யவில்லை என்று இந்திய நிர்வாகக் கழகத்தின் மற்றொரு பேராசிரியர் பியூஷ் சின்ஹா கூறியுள்ளார்.