சிவகங்கை: தமிழக அரசு இந்த மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் தற்போது நவீன மணல் கொள்ளை நடந்து கொண்டிருப்பதாக அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாடினார்.
"சிவகங்கை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சில அடி ஆழத்திற்கு மண் எடுப்பதாக அனுமதி பெற்று பல மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளுகின்றனர். இந்த நவீன கொள்ளையால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. "மணல் கொள்ளையைத் தடுக்காவிடில் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம். தமிழகத்தில் 70 இடங்களில் மணல் குவாரி திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும்," என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்பு என்ன காரணத்திற்காக நிறுத்தப்பட்டது என்பதை தேர்தல் ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து வரும் 30ஆம் தேதி கோவையில் நடைபெறும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் ராமகிருஷ்ணன் சாடினார்.

