முதல்வர்: திமுக ஆட்சியில்தான் மணல் கொள்ளை நடந்தது

முதல்வர்: திமுக ஆட்சியில்தான் மணல் கொள்ளை நடந்தது

2 mins read

தஞ்சை: கடந்த திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் மணல் கொள்ளை நடந்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, எந்த முறைகேடுக்கும் இடமளிக்காமல் மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தியதாகத் தெரிவித்தார். "கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, இணையம் வழி முன்பதிவு செய்து, தவறே ஏற்படாமல் மணல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது," என்றார் முதல்வர் பழனிசாமி.

அரசு குவாரியில் நடந்த மணல் விற்பனையில் எந்தவித தவறும் ஏற் படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசு எந்தத் தவறுக்கும் துணை போகவில்லை என்றார். "அதிமுகவையும் ஆட்சியையும் எதிர்க்கட்சியினர் குறை சொல்லி வருகின்றனர். இவை அனைத்துக்கும், நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து வரு கிறோம். "இந்த இயக்கத்தில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை ஒற்றுமை யுடன் செயல்படுவது எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. ஜெயலலிதா கடவுளாக இருந்து நம்மை வழி நடத்துவதால், நமக்கு எப்போதும் வெற்றி தான், எதிரிகளுக்கு தோல்வி தான்," என்றார் முதல்வர் பழனிசாமி. தனது பேச்சின் இடையே கம்ப ராமாயணத்தை இயற்றியவர் சேக் கிழார் என்று முதல்வர் குறிப்பிட்டபோது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தனது உரையைத் துவங்கியபோது, தஞ்சை நகரின் பெருமைகளைப் பட்டியலிட்டார் அவர். அப்போது 'கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்' என்று அவர் குறிப்பிட்டார்.