திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக மும்பையைச் சேர்ந்த 192 பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். 300 ரூபாய் கட்டண நுழைவாயில் வழியாக அவர்கள் அனைவரும் தரிசனத்துக்காகச் சென்றனர். அவர்களின் நுழைவுச்சீட்டுகளை அதிகாரிகள் பரிசோதித்தபோது அதில் 4 நுழைவுச்சீட்டுகள் மட்டுமே உண்மையானவை என்றும் மற்றவை போலியானவை என்றும் தெரிய வந்தது.
இதையறிந்த மும்பை பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இலவச நுழைவு வாயில் வழியாக சென்று இறைவனைத் தரிசனம் செய்தனர். அவர்கள் மும்பையில் தனியார் முகவையிடம் டிக்கெட்டு களை வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மும்பை தனியார் முகவையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றது கோயில் நிர்வாகம்.

