சென்னை: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மைதிலி. இவர் தனது இரண்டாவது பிரசவத்துக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது ரத்தம் 'எச்எச்' என்ற அரிய வகையைச் சார்ந்தது. எனவே பிரசவத்துக்கு முன்பாக அவ்வப்போது வந்து ரத்தம் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம் பிரசவத்தின் போது உதவும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் மைதிலி அவ்வாறு செய்ய தவறிவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு ரத்தம் செலுத்தி தான் பிரசவம் பார்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அரிய வகை ரத்தம் தேவைப்பட்டதால், பல்வேறு ரத்த தான குழுக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் நிதி நிறுவன அதிகாரியாக பணியாற்றும் 33 வயது ஆதித்யா ஹெக்டே ரத்த தானம் அளிக்க முன்வந்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் ரயிலில் சென்னை வந்து ரத்த தானம் செய்தார். அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இதுவரை 55 தடவை ரத்த தானம் செய்து இருப்பதாகவும் தனது ரத்தம் அரிய வகையைச் சேர்ந்தது என்பதால் வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

