புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட் டின் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ளதாகக் கூறப் படும் கறுப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த இரண்டு நாடு களும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி வரும் 2018 ஜனவரி முதல் இரு நாடுகளும் தகவல் களைப் பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பல் வேறு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக நெடுங்காலமாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பணத்தை மீட்கவும் அது பற்றிய தகல்களைச் சேகரிக் கவும் அந்த நாட்டுடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில், கறுப்புப் பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெ ழுத்தானது. அதில் சுவிட்சர்லாந்து தரப்பில் இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் ஆண்ட்ரிஸ் பாவும் இந்தியா தரப்பில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத் தலைவர் சுஷில் சந்திரா வும் கையெழுத்திட்டனர். இந்தத் தகவல் பறிமாற்ற ஒப்பந்தம் 2018 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

