சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண் டனை பெற்று சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்ப வர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"மக்களுக்காகப் போராடிய அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும், அமைப்பினர் மீதும் தேசத் துரோக வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. குமரியில் போராடிய மீனவர்கள் ஐயாயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தகைய வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்," என முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

