லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரு வீட்டில் தடபுடலாக நடந்த இரவு விருந்துபசரிப்பு நிகழ்ச்சி யில் உணவுடன் மதுவும் பரி மாறப்பட்டது. இந்த மதுவை அருந்தியவர்களில் 9 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந் துள்ளனர். அவர்களின் உயிரைப் பறித்தது கள்ளச் சாராயமா என்பது குறித்து போலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர்ப் பலி ஏற்பட்டால் அதனை விற் பனை செய்த சாராய வியாபாரிக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. உ.பி. மாநிலம், பாரபங்கி மாவட்டம், தால் குர்த் கிராமத் தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த செவ்வாய் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தால் குர்த் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உறவினர் கள் பலரும் கலந்துகொண்டனர். விருந்தின்போது உணவு வகைகளுடன் வீட்டில் தயாரிக்கப் பட்ட மதுவும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. விருந்து முடிந்த சிறிது நேரத்தில் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் லக்னோ வில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மது பானத்தை குடித்ததால் அவர்கள் இறந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கள்ளச் சாராயம் குடித்து இவர்கள் உயிரிழந்தனரா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்னும் உறுதி செய்யவில்லை. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே தகவல்கள் தெரியவரும்.

