கடப்பிதழ்களை முகவரிச் சான்றாகப் பயன்படுத்துவதில் சிக்கல் எழலாம்

கடப்பிதழ்களை முகவரிச் சான்றாகப் பயன்படுத்துவதில் சிக்கல் எழலாம்

1 mins read

புதுடெல்லி: கடப்பிதழ்களை முகவரிச் சான்றாகப் பயன்படுத்துவதில் சிக்கல் எழக்கூடும் என்று கூறப் படுகிறது. ஏனெனில், கடப்பிதழ்களின் கடைசிப் பக்கத்தில் முகவரி அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தை நீக்கும் திட்டத்தை வெளியுறவு அமைச்சு முன்வைத்துள்ளது. இந்தியத் தூதரகத்தின் கடப்பிதழ், விசா பிரிவில் கொள்கை, சட்ட விவகாரங்களுக்கான உள்துறைச் செயலாளர் சுரேந்திர குமார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதோடு அடுத்து வெளியாகும் புதிய வகை கடப்பிதழ்களில் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார்.

கடப்பிதழ் உரிமையாளர் பற்றிய தகவல்கள் வெளிப்படையாகத் தெரியாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு என்றும் அவர் சொன்னார். ஆனால், கடப்பிதழ் உரிமையாளர் பற்றிய அனைத்து தகவல்களும் கணினியில் சேகரிக்கப்படுவதால் முகவரி கடப்பிதழில் நீக்கப்பட்டாலும் அது குடிநுழைவு அல்லது பாதுகாப்பு அமைப்புகளைப் பாதிக்காது என்றும் கூறப்பட்டது. தற்போது கடப்பிதழை வைத்திருப்போர் அதனைப் புதுப்பிக்கும்வரை மாற்றம் எதுவும் இருக்காது. இசிஆர் தேவைப்படும் ஆட்களுக்கான கடப்பிதழ் அட்டையின் நிறம் நீலத்திலிருந்து ஆரஞ்சு நிறமாக விரைவில் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.